தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்..

தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக கட்டத்தை எட்டியுள்ளது.

இன்றும் இரண்டு அரசியல்கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று எட்டாவது நாளாக அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது. எனினும், இதுவரை அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் இருவரும் தனித்தனியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கைதிகளின் விடதலை குறித்து பேசினார்கள்.

எனினும், சட்டமா அதிபர் நாடு திரும்பிய பின்னரே முடிவொன்றை எட்டலாமென பிரதமர் தெரிவித்திருந்தார். வரும் செவ்வாய்க்கிழமையே சட்டமா அதிபர் நாடு திரும்புகிறார்.

சுமந்திரன் எம்.பி நேற்று முன்தினம் அரசியல் கைதிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசுடன் நடத்திய பேச்சு விபரத்தை குறிப்பிட்டு, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.

எனினும், அரசியல் கைதிகள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.

நேற்று இரண்டு அரசியல்கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். சூரியகாந்தி ஜெயசந்திரன், இராசவல்லவன் தபோரூபன் ஆகிய இருவருமே நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் மேலதிக சிகிச்சைகளிற்காக உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் காலையில் மேலும் இரண்டு அரசியல் கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கவேல் நிமலன், சிவசுப்ரமணியம் தில்லைராஜ் ஆகிய இருவருமே சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Author: ram arivu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *