இதோ வெளிவந்தது புங்குடுதீவு அரசியல்வாதி திருடர்களின் உண்மை முகங்கள்

தீவகப்பகுதியில் நன்னீர் வளத்தைப் பாதுகாக்கவும்,தொடர்ச்சியாக மக்களுக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் வகையிலும்,கடற்படையினர் பெருமளவில் எடுக்கும் நன்னீரின் அளவை மட்டுப்படுத்தும் வகையிலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் கொண்டு வந்த பிரேரணை சமூக பொறுப்பற்ற பிரதேச சபை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என சூழகம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

சாட்டியில் மண்கும்பான் முகாம் கடற்படையினர் தினமும் 12,500 லீற்றர் கொள்ளளவு உடைய பௌசரில் ஏழு , எட்டு தடவைகள் தண்ணீரை ஏற்றிச்சென்று குளிப்பதற்கும் , ஆடைகள் கழுவுவவதற்கும் பயன்படுத்துகின்றனர் . இதனை தடைசெய்யுமாறு சூழகம் அமைப்பினால் பலதடவைகள் கோரிக்கைகள் , மகஜர்கள் விடுக்கப்பட்டது . உடனே மூன்று பௌசர்களாக குறைக்கப்போவதாக பிரதேச சபை தவிசாளரும் , பிரதேச செயலாளரும் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை கடற்படையினரின் செயற்பாடு மாற்றமின்றி தொடர்கின்றது . குறைந்தபட்சம் முகாம் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தல் கடிதம் கூட இன்னும் அனுப்பியிருக்கவில்லை இவர்கள் .
ஆனால் பொதுமக்களுக்கு மாத்திரம் முற்றாக தடைவிதித்துள்ளனர்.

இப்பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் விதமாக நேற்று முன்தினம் வேலணை பிரதேச சபையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கருணாகரன் நாவலன் பிரேரணை ஒன்றை கொண்டுவர முற்பட்டிருந்தார் .

அதில் கூறப்பட்டிருந்த விடயங்களாவன

கடற்படையினர் தண்ணீர் எடுப்பது மூன்று பௌசர்களாக உடனடியாக குறைக்கப்படவேண்டும் . அல்லது படிப்படியாக முற்றாக நிறுத்தப்படவேண்டும் . ஏனெனில் பாதுகாப்பு படைகளுக்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் ஒதுக்கப்படுவதால் அவர்களுக்கு யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தோ , கடல் நீர் சுத்திகரிப்பின் மூலமோ இலகுவாக நீரைப் பெற்றுக்கொள்ளமுடியும் . தீவக மக்களுக்கு குடிப்பதற்கே மட்டு மட்டாகவுள்ள நீரை அவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்துவதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தனிப்பட்ட குடும்ப வியாபார நிறுவனமான புங்குடுதீவு சர்வோதயத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீர் விநியோக ஏகபோக உரிமை இரத்துச்செய்யப்படவேண்டும் . சர்வோதயம் இன்று வரை குடிநீரை சீராக விநியோகிக்கவில்லை . ஆனால் இந்த ஒப்பந்தம் காரணமாக அவர்களுக்கு மாதாந்தம் எட்டு இலட்சம் ரூபா வருவாய் கிடைக்கின்றது . இவ் ஒப்பந்தத்தினை அவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு அரச அதிகாரி ஒருவர் மாதாந்தம் ஒன்றரை இலட்ச ரூபாய் இலஞ்சம் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . சில வங்குரோத்து பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் 20000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு அன்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு நாட்களும் நீர் விநியோகம் செய்யவே பிரதேச செயலகம் ஊடாக சர்வோதயத்திற்கு பணம் வழங்கப்படுகிறது . ஆனால் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு தடவையும் , சில இடங்களில் கடந்த பத்து நாட்களாக நீர் விநியோகிக்காத நிலையுமே காணப்படுகின்றது .

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய நீரை சர்வோதயம் தினமும் வியாபார நிலையங்களுக்கும் , கோயில் கட்டட நிர்மாண வேலைகளுக்கும் பணத்திற்கு விற்றுச்செல்வது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது . மேலும் தமக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக சர்வோதயம் நீர் வழங்கிவருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த ஏகபோக உரிமையை உடனடியாக இரத்து செய்து புங்குடுதீவுக்கு தினமும் நான்கு பௌசர்கள் என்ற அடிப்படையில் சர்வோதயத்திற்கு ஒன்றிற்கும் , புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ஒன்றிற்கும் , புங்குடுதீவு சென்சேவியர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு ஒன்றிற்கும் , தனியாருக்கு ஒரு பௌசர் என்றவாறு மண்கும்பான் / சாட்டியில் நீர் ஏற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் சூழலியல் பாதிப்புகளை குறைத்து மக்களை துன்புறுத்தாது விநியோகம் செய்யமுடியும் .

தற்போது சர்வோதயம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டத்தினால் மக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதற்கு பல கீலோமீற்றர்கள் அலையவேண்டியுள்ளது . பல மணிநேரங்களை வீணடிக்க வேண்டியுள்ளது . பெரும்பாலான நாட்களில் நீர் விநியோகிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது . வெளிப்படையாக சொன்னால் மக்கள் நீருக்காக ஆபிரிக்க நாடுகளைப் போன்று நாயாக அலைய வேண்டிய நிலை அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

அத்துடன் வேலணை பகுதிக்கு இரண்டு பௌசர்களுக்கும் , நயினாதீவு , அல்லைப்பிட்டி , மண்டைதீவு , கரம்பன் மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு பௌசர் என்றவாறு தினமும் சாட்டி நீரை வழங்குவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் . இதன்மூலம் நன்னீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு மிக இலகுவாக விநியோகத்தை மேற்கொள்ளமுடியும் .

மேலும் மண்கும்பான் / சாட்டி பிரதேசங்களில் தூர்ந்து காணப்படுகின்ற கிணறுகள் , குளங்கள் சீரமைக்கப்படவேண்டும் . தொடர்ச்சியாக ஒரே கிணறுகளில் நீரை அள்ளுவது பிரச்சினையே . நன்னீர் ஊற்றுள்ள பகுதிகளில் புதிதாக சில கிணறுகளையாவது உடனடியாக அமைத்திட வேண்டும் . மண்கும்பான் , சாட்டி பிரதேசத்தில் மண் அள்ளுவதற்கான அனுமதி உடனடியாக ரத்துச்செய்யப்படவேண்டும் . அளவுக்கதிகமாக மண் அள்ளப்பட்டதாலேயே நன்னீர் வளம் பாதிப்படைய நேரிட்டுள்ளது .

அத்துடன் கடற்படையினர் எடுக்கும் 12500 லீற்றர் நீர் தடைசெய்யப்பட்டு 4500 லீற்றருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவேண்டும் . இதன்மூலம் நீர் ஒரேயடியாக உறிஞ்சப்படுவதை தடுக்கலாம் .

இப் பிரதேசங்களில் நீரை தேக்குவதற்கு சிறிய குளங்கள் அமைக்கப்படவேண்டும் , மக்கள் பாவனையில்லாத காணிகளுக்கு வரப்புக்கள் அமைக்கப்பட்டு நீர் தேக்கப்பட வேண்டும் . மரநடுகை மேற்கொள்ளப்படவேண்டும் . மிக இலகுவாக செய்யக்கூடிய இவ்வாறான சூழலியல் பாதுகாப்பு செயற்பாடுகளை பிரதேச செயலகமும் , பிரதேச சபையும் இதுவரை காலமும் ஏன் மேற்கொண்டிருக்கவில்லை ? இவற்றையெல்லாம் மேற்கொள்ளாது நன்னீர் வளங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் ஒரேயடியாக நீர் விநியோகத்தினை நிறுத்தி பொதுமக்களை துன்புறுத்தியிருப்பது அடிப்படை மனித உரிமை மீறலே !!

கடந்த 19-06-2018 அன்று காலை 9. 30 முதல் மாலை 4.30 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற பிரதேச சபை அமர்வில் கௌரவ உறுப்பினர் கருணாகரன் நாவலன் கொண்டுவந்திருந்த பிரேரணையை வாக்களிப்புக்கு எடுக்கவிடாது சர்வோதயத்திடம் லஞ்சம் பெற்ற சில உறுப்பினர்கள் சபையில் அடாவடித்தனங்களை மேற்கொண்டு சபையை குழப்பியிருந்தனர் . சபை அமர்வில் தகாத வார்த்தைகளும் இவர்களால் பொழியப்பட்டு உள்ளது . இவர்கள் யாரென்று பார்த்தால் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்டும் ( இருபது , முப்பது வாக்குகள் பெற்றவர்களே ) புதிய போனஸ் எனும் கீழ்த்தரமான முறையில் பிரதேச சபைக்குள் பின்கதவால் வந்தவர்களே . மேலும் பிரதேச செயலாளர்,பிரதேச சபை தவிசாளர் ( ஈபிடீபி ) ,மற்றும் ஆறு பிரதேச சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலேயேதான் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர் .

ஆகவே தீவக மக்களின் அடிப்படை பிரச்சினையாகிய குடிநீர் தட்டுப்பாடு குறித்து இவர்களுக்கு ஏதும் புரியப்போவதில்லை . புரிந்தாலும் அவர்களில் சிலர் கை நீட்டி வாங்கியுள்ள லஞ்சம் அதற்கு இடம்கொடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *