பாகிஸ்தானில் மனித கடத்தலை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்றம்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் மனித கடத்தலை தடுக்கும் விதமாக அந்நாட்டு செனட் சபை புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் நிகழும் மனித கடத்தல் தொடர்பான சம்பவங்களை விசாரித்து தண்டிப்பதற்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

மனித கடத்தல் பிரச்னை என்பது பாகிஸ்தானின் நீண்டகால பிரச்னைகளுள் ஒன்றாகும். சுமார் 10 லட்சத்திற்கும் மேலானோர் கொத்தடிமை தொழிலாளர்களாக, பாலியல் அடிமைகளாக சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது புள்ளிவிவரங்கள்.

இதில் பெரும்பாலானோர், சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் விவசாயம் மற்றும் செங்கல் சூளைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் அடிமைகளாக சிக்கியுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அமெரிக்க அரசின் மனித கடத்தல் கண்காணிப்பு அறிக்கையின்படி, பாகிஸ்தானில் மனித கடத்தல் என்பது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகின்றது. இந்த சூழலில் பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துள்ள ‘மனித கடத்தல் தடுப்புச் சட்டம்’ முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானில் மனித கடத்தல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் ஒருவரை கட்டாய வேலையில் ஈடுபடுத்தினாலோ அல்லது ஒருவரை கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினாலோ அந்நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சம்) அபராதம் விதிக்கப்படும்.

ஒருவேளை, இந்த குற்றம் குழந்தைகள் அல்லது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டால் அக்குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும்.

கடத்தப்பட்ட ஒருவரை உடல்ரீதியாக காயப்படுத்தினாலோ, உயிருக்கு அச்சுறுத்தலான நிலை ஏற்படுத்தினாலோ, அல்லது அவர் உயிரிழந்தாலோ, அவரின் பயண ஆவணங்களை பறித்தாலோ இந்த கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு/குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், 20 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம்) வரை அபராதமும் விதிக்கலாம்.

இச்சட்டத்தின் மூலம், மனித கடத்தல் குற்றம் என்பது பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய குற்றமாகக் கருதப்படும். இக்குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *