தோல்வியடைந்தபோதிலும் 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்த மெக்சிகோ

சுவீடனுக்கு எதிராக எக்கெத்தரின்பேர்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற எவ். குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 0 க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ தோல்வி அடைந்தது. எனினும் தென் கொரியாவிடம் ஜெர்மனி தோல்வி அடைந்ததால் எவ் குழுவிலிருந்து சுவீடனுடன் மெக்சிகோவும் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இரண்டு அணிகளும் போட்டியின் முதலாவது பகுதியில் வெற்றிதோல்வியற்ற முடிவை நோக்கி நகர்வதைப் போன்று தென்பட்டது. ஆனால் இடைவேளையின் பின்னர் சுவீடன் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த அரம்பித்தது.

24 நிமிட இடைவெளியில் ஒரு பெனல்டி, சொந்த கோல் உட்பட 3 கோல்களைப் போட்ட சுவீடன் அமோக வெற்றியீட்டி எவ். குழுவில் அணிகள் நிலையில் முதாலம் இடத்தைப் பெற்றது.

போட்டியின் 50ஆவது நிமிடத்தில் மெக்சிகோ கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி சுவீடன் பின்கள வீரர் லூட்விக் ஒகஸ்டினசன் முதலாவது கோலைப் போட்டார்.

12 நிமிடங்கள் கழித்து கிடைத்த பெனல்டியை சுவீடன் அணித் தலைவர் க்ரான்க்விஸ்ட் கோலாக்கினார். இவர் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்ட இரண்டாவது பெனல்டி இதுவாகும். ஒட்டு மொத்தமாக 24 பெனல்டிகள் இம்முறை வழங்கப்பட்டுள்ளன.

போட்டி 74ஆவது நிமிடத்தைத் தொட்டபோது மெக்சிகோ வீரர் ஈ. அல்வாரெஸ் சொந்த கோல் ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

இது இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்பட்ட 6ஆவது சொந்த கோலாகும்.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *