துருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் , எர்துவான்

துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளரான முஹர்ரம் இன்ஸ் 31 சதவீத வாக்குளை பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முடிவு என்னவாக இருந்தாலும், தனது ஜனநாயக போராட்டம் தொடரும் என்று எதிர்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊடகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக எதிர்கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும்.

தனது ஏகே கட்சியின் ஆளும் கூட்டணியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளதாக ரிசெப் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகம் குறித்து துருக்கி, இந்த உலகத்திற்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

துருக்கியின் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், புதிய குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் அதிபர் கைகளுக்கு செல்லும். இது இத்தேர்தல் முடிந்த பிறகு அமலுக்கு வரவுள்ளது.

இது ஜனநாயக ஆட்சியை பலவீனப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எண்ணப்பட்ட 96% வாக்குகளில், அதிபர் ரிசெப்பின் ஏ.கே கட்சி 42% வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் முன்னிலையில் இருப்பதாக அரசு ஊடகமான அனடோலூ தெரிவிக்கிறது. முக்கிய எதிர்கட்சியான குடியரசு மக்கள் கட்சி 23% வாக்குகளை பெற்றுள்ளது.

” சுமார் 87% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த தேர்தலை விட இது அதிகம்” எனவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

குடியரசு மக்கள் கட்சியின் மைய-இடது வேட்பாளரான இன்ஸ் தனது வீழ்ச்சியை செய்தியாளர் ஒருவரிடம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக, வாக்கு எண்ணிக்கைகளை மாற்றி வெளியிடுவதாக அரசு ஊடகத்தை குற்றஞ்சாட்டிய இன்ஸ், அதிகாரப்பூர்வ முடிவுகள் வந்த பிறகே தனது கருத்தை கூறப்போவதாக தெரிவித்தார்.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *