உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்

1.இந்தியா

2.ஆஃப்கானிஸ்தான்

3.சிரியா

4.சொமாலியா

5.சௌதி அரேபியா

6.பாகிஸ்தான்

7.காங்கோ குடியரசு

8.ஏமன்

9.நைஜீரியா

10.அமெரிக்கா

எதனை அடிப்படியாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது?

சுகாதாரம், பாகுபாடு பார்த்தல், கலாசார மரபுகள், பாலியல் வன்கொடுமை, பாலியல் அல்லாத வன்கொடுமை, ஆள் கடத்தல். இந்த ஆறு மரபுகளைஅடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே, இந்தியா பெண்களுக்கு ஆபத்தான நாடு என்று கூறுகின்றன.

இதே ஆய்வு ஏழு வருடங்களுக்கு முன்பும் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது.

பெண்கள் பிரச்சனைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதார பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சுகாதாரம்

சுகாதார குறைபாடு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு, பாலியல் நோய்கள், குழந்தை பேறுகால ஆரோக்கியம், குழந்தை இறப்பு விகிதம், கருத்தடை மற்றும் குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் முதல் மோசமான நாடு ஆஃப்கானிஸ்தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா இதில் 4வது இடத்தில் உள்ளது.

பாகுபாடு

வேலையில் பாரபட்சம், வாழ்வாதாரத்தை இயக்குவதில் இயலாமை, நிலம், சொத்து அல்லது பரம்பரை உரிமைகளில் பாகுபாடு, கல்வி பற்றாற்குறை, உள்ளிட்டவைகளை அடக்கி பாகுபாட்டில் எது மோசமான நாடு என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா முறையே ஒன்று மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன.

பெண் பிறப்புறுப்பு சிதைவு, குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன.

கலாசார மரபுகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் ரீதியான வன்கொடுமை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது, இது தொடர்பான வழக்குகளில் முறையான நீதி கிடைக்காதது, கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வது என இதிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

பாலியல் அல்லாத வன்கொடுமை

வன்முறை, உடல் மற்றும் மன ரீதியாக இங்கு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.

ஆள் கடத்தல்

வீட்டில் அடிமைபடுத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம் மற்றும் பாலியல் அடிமையாக நடத்தப்படுவது என இவற்றை அடிப்படையாக வைத்து பெண்களுக்கு எது ஆபத்தான நாடு என்று கேட்கப்பட்டது.

இதிலும் இந்தியாவே முதலிடத்தில் அபாயகரமான நாடாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேட்கப்பட்ட ஆறு பிரிவுகளில், 3 பிரிவுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா என்கிறது தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவு.

Author: lankann

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *